“உன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன்” என்று ஞானத்தின் குறுஞ்செய்தி வந்ததும் கார்த்திக்கு படபடப்பு வந்தது. ஞானத்தைப் பார்த்துவிட்டால் செல்வி இன்று முழுவதும் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். கடை வீதியிலிருந்து உடனடியாக பைக்கை வீட்டிற்கு திருப்பினான். ஞாயிற்றுக்கிழமையாக இல்லாவிட்டால் அவனை அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிடலாம்.
ஞானம் என்கிற ஞானசேகரன் நண்பன். வாலிப வயதில் இலக்கியம், கவிதை, புரட்சி என கூட்டங்களுக்குச் செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் ஏதாவது எழுவதுமாய் இருந்த காலத்தில் கிடைத்த நட்பு. வேலை, திருமணம் என ஒவ்வொன்றாய் வர அதே வரிசையில் மேற்குறித்த ஒவ்வொன்றும் விலகிப்போய்விட்டன. நண்பர்கள் எல்லோரும் ஆடி அடங்கியும் ஞானம் மட்டும் இலக்கியப்பித்து தெளியாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாண்டுகாலம் சினிமாப்பித்துப்பிடித்து ஆடினான். வார இதழ் ஒன்றில் நிறுபராகப் பணியாற்றி போலீஸிடம் அடிவாங்கினான்
இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைத் தேடி வந்து மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பான். எப்போது படிப்பான் எப்போது எழுதுவான் எனத்தெரியாது, போனால் போன இடம், வந்தால் வந்த இடம். எந்த முன் முடிவும் இல்லாமல் எப்படி ஒருவனால் வாழ முடிகிறது என்பது ஆச்சிரியமே. ஒரு துறவி போன்ற சுதந்திரவாழ்க்கை வாய்க்க அவன் திருமண பந்தத்தில் மாட்டிக் கொள்ளாத கொடுப்பினைதான் காரணம்.
Add caption |
என்ன வேலை செய்றீங்கனு யாராவது கேட்டால் “எழுதுறேன் நண்பா” என்பான். எழுதி வாழமுடியுமா எனக் கேட்டால் “வாழ்கிற உன்னால் எதாவது எழுத முடியுமா?” என இடக்கு மடக்காக கேட்பான். யாருக்கும் அதிகம் தெரியாத பத்திரிக்கைகளில்தான் எழுதுவான். கோடம்பாக்கம் போய்வந்த பிறகு எழுதுவது அபூர்வமாகி பேச்சு கூடி விட்டது. யாரைப்பார்த்தாலும் எதைப்பற்றியேனும் ஓயாது பேசுவான்.
உனக்கு எப்படி இலக்கிய ஆர்வம் வந்தது என யாராவது கேட்டால், “எங்க வீட்டில் ஒருவருக்கும் புத்தகம், இலக்கியமெல்லாம் அறவே பிடிக்காது. அதனாலதான் எனக்கு பிடிக்குது.” செலவுக்கு பணம் தரும்வரை பேருந்துகளை போகவிட்டு நிற்பான். பணம் வாங்கியதும் உடனே கிளம்பிப்போவான். ஆபூர்வமாய் சில நாட்கள் கட்டாயப்படுத்தினாலும் பணம் வாங்க மாட்டான். என்ன கணக்கென்றே தெரியாத ஒரு கணக்கு அவனுக்குள் இருக்கும். தண்ணி கூடிவிட்டால் நவீனம் மறந்து பழைய பிளாக் அண்ட் ஒயிட் பாடல்களாக பாடுவான். பஸ் ஸ்டாண்டே திரும்பி பார்க்கும். கண்டுகொள்ள மாட்டான்.
ஓரிரு வாரங்களில் ஞானத்தால் குடும்பத்துக்குள் மறுபடியும் உரசல். கார்த்தியின் மனைவி செல்வி காபியை தந்து விட்டு, “நானும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கேன்” என்று ஒரு பாடப்பழைய டைரியைக் கொண்டு வந்து தந்தாள்.
மேம்போக்காக பார்த்துவிட்டு “இதெல்லாம் கவிதைகளே இல்லை. கவிதைக்கான முயற்சி” என்றான். ஞானம் பொய் சொல்கிறவன்தான் காபிக்காகவெல்லாம் அவன் பொய் சொல்வதில்லை. அவன் கிளம்பிப் போனதும் குமுறி குமுறி அழ ஆரம்பித்து விட்டாள் செல்வி.
“அவன் ரசனை வேற. உன் ரசனை வேற. யார் உன் கவிதைகளை அவனிட்ட தரச்சொன்னது?” என சமாதான முயற்சியில் ஈடுபட்டான் கார்த்தி.
“நீங்களெல்லாம் எவ்வளவு நல்ல கவிதைகள்னு பாராட்டினீங்க. உங்க நண்பர் கர்வம் பிடிச்சவர்னு” கோபப்பட்டாள்.
கல்யாணமான புதிதில் சொன்னதையெல்லாம் உண்மையென வெள்ளந்தியாய் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறாள் செல்வி. அப்போதிருந்த மதி மயக்கத்தில் செல்வி எழுதிய பலசரக்கு சிட்டையைக் கூட பலமுறை பாராட்டியிருக்கிறான் கார்த்தி. “உங்க மனைவியை அவமானப்படுத்தினவனுக்கு இனி உதவி செஞ்சீங்கன்னா நீங்க என்ன மதிக்கலைன்னு அர்த்தம்” என்றாள்.
ஞானத்தின் நண்பர்கள் உதவுவதே கூட ஒருவித இயலாமையின் வெளிப்பாடு எனத் தோன்றும். பொறுப்புகளை சுமக்காத ஒரு எளிய வாழ்க்கை எவருக்குமே ஒரு கனவுதான். இவர்கள் பலரும் கண்ட கனவினை ஞானம் பல சிரமங்களோடு அனுபவிக்கிறான். சிறுசிறு உதவிகள் அவனுக்கு செய்கிற போதெல்லாம் தாங்கள் விரும்பிய வாழ்க்கையை அவன் வாழ்வது கண்டு நிறைவடைகிறோமோ என்று தோன்றும். அதனால் ஞானத்தைப்பற்றி “பொறுப்பில்லாதவன்” என செல்வி சொல்லும் போதெல்லாம், “தைரியமானவன்டி” என கார்த்தி திருத்திச் சொல்வான். திருமணம் செய்து கொண்டு பொறுப்புகளை சுமக்க ஒரு கெட்டிக்காரத்தனம் வேண்டுமென்றால், ஒற்றையாய் வாழ்வை கழிக்க நிறைய தைரியம் வேண்டுமென்பதை ஞானம் உணர்த்திக் கொண்டிருந்தான்.
“ உழைக்காமல் ஊர் சுத்தறது என்ன பெரிய காரியமா? செலவழிக்கிற காச சம்பாதிச்சாதானே கஷ்டம் தெரியும்” என்பாள் செல்வி.
“ நீ நினைக்கிற மாதிரி ஆள் இல்ல அவன். அவன் குடும்பம் வசதியான பெரிய குடும்பம். அவனுடைய பங்கு சொத்தே பல இலட்சங்கள் தேறும். ஆனால் அவன் குடும்பத்தில் பணம் ஏதும் வாங்காமல் வாழ்ந்துட்டு இருக்கான்.”
“உங்கள மாதிரி நண்பர்கள் இருந்தால் அவர் எப்படி திருந்துவார். அவர் பங்கு பணம் வந்ததும் ஊர்சுத்துறதை நிறுத்திட்டு பொழப்ப பார்ப்பார் பாருங்க, அப்பச் சொல்லுவீங்க” என்றாள்.
அதற்குபின் ஒருமுறை போனில் பேசும்போது “ஆபிஸில் மட்டும் வந்து பார். வீட்டுக்கு வேண்டாம்” என்று சொல்லி விட்டான் கார்த்தி. அவனும் நீண்ட நாட்களாய் வரவில்லை. நண்பர்களிடம் கொஞ்சமும் ரோஷம் பார்க்கமாட்டான் ஞானம். வேறு ஏதாவது இருக்கும்.
அவன் வராமல் போவது கார்த்திக்கு பெரிய இழப்பாகத் தோன்றும், இருவருக்கும் பொதுவான நண்பர்களின் வீட்டு விஷயங்கள் எல்லாம் நேரில் போய் பார்த்துத் தெரிந்து கொண்ட மாதிரி ஞானம் விளக்கிச் சொல்லுவான்.
சேவியர் பொண்ணு கீழே விழுந்து கால் ஒடிந்தது; பரமு அண்ணன் வெளி நாட்டிலிருந்து வந்தது; சியாமளா ரெட்டைக் குழந்தைகள் பெற்றது; சங்கரராமன் கார் வாங்கியது; ரஷீத் வீடு கட்டுவது; தங்கம் தியேட்டர் இடிக்கப்பட்டு ஜவுளிக்கடையானது, தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வந்து இரவெல்லாம் ஜொலிப்பது வரை சொல்லிவிட்டுத்தான் போவான். எப்போது எதைப் பேசுவது என்பதெல்லாம் அவனிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் வீட்டை விட்டு கிளம்பி பஸ் ஸ்டாண்டில் வந்து தனியே நிற்கும் போதுதான் சியாமளா பற்றி பேசுவான். சில நேரங்களில் தேவையில்லாமல் நிறைய பொய் பேசுவான். ஆனால் அவன் பேசும் போதே பொய் தனியே தெரிந்து விடும். அப்படி ஒரு முகம் அவனுக்கு. பல நண்பர்களை கடன் வாங்கிவிட்டு அவர்களைப் பார்ப்பதை தவிர்ப்பான். ஆனால் பெரும்பாலான நண்பர்கள் அவனைத் தவிர்ப்பதேயில்லை. எல்லா நண்பர்களின் வீட்டிலும் அவனுக்கான நாற்காலி காத்திருந்தது.
அவன் குடும்பச் சொத்துகளை விற்று பணம் வந்து பிரித்துக் கொண்டதாய் தகவல் வந்ததும் மனதுக்கு நிம்மதியாயிருந்தது. இனிமேல் ஞானம் செட்டில் ஆகி விடுவான் என நினைப்பு வந்தது. என்னவோ இன்று திடீரென வந்திருக்கிறான்.
பூட்டியிருந்த வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். கடைவீதிக்குப் போன செல்வி இன்னும் வரவில்லை போலிருக்கிறது.
“எப்படிடா இருக்க?”
“ஒரு குறையுமில்லை. அப்படியேதான் இருக்கேன்” கணமான தோள்பை வைத்திருந்தான். ரொம்ப தூரத்திலிருந்து வருகிறான் என நினைத்துக் கொண்டான்.
“என்னடா ரொம்ப நாளா வரலை ஏதும் கோபமாடா?”.
“அதெல்லாமில்லடா. ஒரு ஏமாளி கல்கத்தாவுல ஆய்வு பணிகள் இருக்கு உதவிக்கு வரமுடியுமான்னான். அவன் தயவுல அந்த ஊரைச் சுத்தினேன். உன்னைப் பார்க்கனும்னு தோனுச்சு கிளம்பி வந்துட்டேன். மறுபடியும் போகனும் எல்லாம் அவன் செலவுதான். அப்புறம் வாழ்த்துக்கள் நீ அப்பா ஆகப்போற. நடக்குறப்பதான்டா எல்லாம் நடக்கும். அதுக்குள்ள பொலம்பித் தீர்த்துட்ட. அம்மா ஜாடையில உனக்கு பொண்ணுதான்டா பொறக்கும்”.
“உனக்கு யாருடா சொன்னது”
“தெரிஞ்சு வந்துட்டேன்ல அதுதான் ஞானம்”
“செல்வி வந்ததும், பார்த்துட்டு போடா”
“குழந்தை பொறந்ததும் உடனே தகவல் சொல்லு. கண்டிப்பா வந்துடுவேன் அப்ப பார்த்துக்கிறேன்”.
பணம் தந்தும் பெற மறுத்துக்கிளம்பிவிட்டான். இவன் கலைஞனா? காரியக்காரனா? குடும்பச் சொத்தில் பங்கு வந்ததைப் பற்றி ஏதும் பேசாமல் போகிறானே எனத்தோன்றியது. செல்வி வந்ததும் ஞானம் வந்து சென்றதைப் பற்றி பேசினான். சாமி மலையேற ஆரம்பித்தது.
“ஊர் சுத்திட்டே இருந்தாரே, சொத்துல பங்கு வந்ததும் வந்தாரா? ஏதாவது அதுபத்தி சொன்னாரா?”
“எப்படி செல்வி எல்லாத்துக்கும் ஒரு காரணம் கண்டுபிடிக்கிற?”.
“பொம்பளைங்களுக்கு தெரியுங்க யார் எப்படின்னு. இவர் காரியக்காரர்தான்”.
செல்விக்கு யாரையாவது பிடித்தால் ரொம்ப பிடிக்கிறது, பிடிக்காவிட்டால் சுத்தமாக பிடிக்காமல் போகிறது. கொஞ்ச நேரத்தில் சங்கரராமனும், கோமதியும் வந்தார்கள். கோமதி தங்கையின் திருமண அழைப்பிதழ் தந்தார்கள். செல்விக்கு கோமதி தூரத்துச் சொந்தம் வேறு.
“என்னப்பா இன்னைக்கு ஊர்க்காரங்களா வந்து ஊர் ஞாபகத்தை கிளப்பீட்டிருக்கீங்க” என்றவாறு வரவேற்றான். ஞானம் வந்து போனதைச் சொன்னதும் சங்கரராமனே ஆரம்பித்தான்.
”ரைஸ்மில், தோட்டம் எல்லாத்தையும் வித்தூட்டாங்கடா”.
என்றான்.
அடர்ந்து படர்ந்த மாமரங்கள்தான் நினைவிற்கு வந்தன. எத்தனை நாட்கள் ‘படிக்கப்போகிறோம்’ எனச் சொல்லிவிட்டு ஞானத்தின் மாந்தோப்பில் விளையாடித் திரிந்தோம்?.
இளநீர் மாதிரியான சுவையுடன் தளும்பி நிறைந்த வட்டக்கிணறு. எல்லோரும் அங்கேதான் நீந்திப் பழகினோம். அத்தனை வகையான பறவைகளை வேறு எங்கும் பார்த்ததில்லை. “ஞானம் பங்கிற்கு எவ்வளவு தந்தாங்க?” ஆவலை அடக்க முடியாமல் செல்வி கேட்டாள்.
“ மொத்தம் ஒன்னரைக் கோடியே சொச்சம். பணம் மொத்தமும் மூத்தவர் பாஸ்கர் அண்ணன்தான் வாங்கி பிரிச்சுத் தந்தார். ஞானம், மட்டும்தான் கல்யாணமாகாதவன் . அதனால அவனுக்கு கல்யாணச் செலவுக்கும் சேர்த்துத் தரணும்னு சொல்லி வேணுங்கரதக் கேளுன்னாரு”.
மொத்த பணத்தில் இருந்து ஒரே ஒரு ஐநூறு ரூபா மட்டும் எடுத்துக்கிட்டு ‘போதும்ணே’ன்னு சொல்லிட்டான்டா ஞானம். தங்கம்மா அக்கா மட்டும்தான் அவன் வாங்காட்டாலும் அவனுக்குரியதைக் கொடுக்கனும்னு சொல்லுச்சு. அவன் கிளம்பிட்டான். பாஸ்கரும் நவமணி அண்ணனும் என்னையத்தான் அனுப்பி பேசச் சொன்னாங்க.
“உன் பங்கை வாங்கி பேங்க்கில போடுடான்னு” நான் சொன்னேன்.
“ரத்த உறவுன்னாலும் அவங்களுக்கு பணம்தான்டா பெரிசு. இலக்கியம் ஏதும் புரியாதுடா. பின்னால நமக்குக் கொடுக்கதான் அவுங்க சொத்த வித்ததுக்கு காரணம்னு ஒரு கதை சொல்வாங்க. எனக்கு நீ, பஷீர், சேவியர், கார்த்தி போதும்டா சங்கரா. போதாததுக்கு கல்யாணம் ஆகாத எனக்கு இந்த வயசுல எதுக்குடா இவ்வளவு பணம். அந்த வீட்டுக்குன்னு நான் ஒரு காசு சம்பாதிச்சும் கொடுக்கல, சொத்துல பங்கும் வாங்கல. கணக்கு நேர்னு “ சொல்லிட்டான்டா.
”உன்னை கவனிச்சுக்கிற தங்கம்மா அக்காவுக்காவது உன் பங்கை வாங்கிக்கொடென்னு” சொன்னதுக்கு “அதுக்கு மட்டும்தான் நான் உசத்தி. அவனுகளுக்கும், தங்கச்சிகளுக்கும் நான் ஒரு செல்லாக்காசு. ஆனா என்னை பொருத்த மட்டுல எனக்கு அவுங்க எல்லாருமே ஒன்னுதான்டா. என் பங்கு வாங்கலேன்னா எல்லாருக்குமே சமமா பிரிஞ்சுதானே கிடைக்கும். அவுங்க எல்லாரும் எனக்கு உறவுதாங்கிற இதைவிட எப்பக்காட்ட முடியும். செத்த வீட்ல ஒண்ணா கட்டி அழும் போதா? ” என்று சொல்லிட்டு மறுநாள் கல்கத்தா கிளம்பிட்டான்டா”.
கார்த்திக்கிற்கு ஞானத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
அருமை. செல்விக்கு ஞானத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது என்று முடித்திருந்ததால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் யோசனை அங்கிள்.
ReplyDeleteநன்றி
Deleteநிறைத்தெப்பம் அருமையான சிறுகதை , ஞானம் போன்ற நிறைந்த மனிதனை காண்பது அரிது. அத்தகைய குணங்கள் கொண்ட மனிதனை இலக்கியத்தில் அருமையாக உருவாக்கிதற்கு ஆசிரியரை பாராட்ட வேண்டும்
ReplyDeleteஅன்புடன்
தேவராஜ் விட்டலன்