Saturday 13 June 2020

நூல் மதிப்புரை

நூல் =எங்களை ஏன் டீச்சர்  பெயிலாக்கினீங்க. 
தமிழில் =ஜே. ஷாஜஹான். 
பதிப்பு =வாசல் 
விலை =ரூ. 50/

       1960களில் இத்தாலியில் உள்ள பார்ப்பியனா பள்ளியைச்சேர்ந்த எட்டு மாணவர்களால் ஓராண்டில் எழுதி முடிக்கப்பட்ட Letter to A Teacher என்ற ஆங்கில நூலின் அறிமுகம்தான் இந்நூல். இந்நூல் இத்தாலிய ஏழைக்குழந்தைகளின் விமர்சனமோ ஏக்கமோ மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள ஏழை மாணவர்களின் ஏக்கமும்தான். 
      இது ஆசிரியருக்காக மட்டும் எழுதப்பட்டதல்ல, பெற்றோருக்காகவும், கல்வியில் அக்கறை கொண்ட ஜனநாயக இயக்கங்களுக்காகவும் எழுதப்பட்டது. 

பார்ப்பியனா என்பது ஒரு இருபது வீடுகளைக்கொண்ட ஒரு மலையிடமாகும். அங்கிருந்த தேவாலயத்திற்கு1954 ல்  வந்த பாதர் மிலானிதான் இப்பள்ளியின் நிறுவனர். 1967 ல் மிலானி மறைந்தபோது அப்பள்ளியும் மறைந்தது. 
        இத்தாலியப் பள்ளிகளின் நேரம் நண்பகல் 1.30 உடன் முடிந்து போகும். அதன் பின்னர் வசதியான வீட்டுப்பிள்ளைகள் டியூஷன் போகும். வசதியில்லாதவர்கள் அவரவருக்கு தெரிந்த வேலையை செய்ய வேண்டும். ஏறக்குறைய நம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குலக்கல்வி போன்றதுதான். 

     பாதர் மிலானி பார்பியானாவில் இருந்த பதின்ம வயது மாணவர்கள் ஒரு பத்துப்பேரை ஒன்று சேர்த்து ஒரு பள்ளியை உருவாக்கினார். அவர்கள் அனைவரும் பள்ளியால் கைவிடப்பட்டவர்கள், அல்லதுப்பள்ளிக்குச்செல்லதவர்கள். வாரத்தில் ஏழு நாட்களும் அங்கு வேலைநாள்தான். மாணவர்களே ஆசிரியர்கள். நல்ல முறையில் கற்றல் கற்பித்தல் நடந்தது. இனி கடிதப்பகுதிகளைப் பார்ப்போம். 

**அன்புள்ள மிஸ், 
      எங்களின் பெயர் உங்களுக்கு நினைவுக்கு வராது, எங்களுக்கு நினைவிருக்கிறது, நீங்கள்தானே எங்களை பெயிலாக்கி தொழிற்சாலைகளுக்கும், வயல்வெளிகளுக்கும் வேலைக்கு அனுப்பியவர்கள். 

**அரசியலின் எல்லாப் பொறுப்புகளையும், பாராளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளையும் வசதியானவர்களுக்கு அந்த தொழிலாளர்கள் விட்டுக்கொடுத்திருப்பதை இப்போதுதான் அறிகிறோம். 

**அரசியலமைப்பின் படி எட்டு ஆண்டுகள் கட்டாய படிப்பு உறுதிசெய்யப்பட்டும் துவக்கப்பள்ளிக்கு மேல் படிக்க நாங்கள் வெகுதூரம் பயணப்படவேண்டியதுள்ளது. 

**பார்பியானாவில் ஒரு ஆச்சர்யம் மிஸ், அங்கு படிக்க லாயக்கற்றவன் என்று ஒருவர் கூட இல்லை. 

**எந்த கல்விப் பின்னணியுமில்லாத, தாமதமாகப் புரிந்துகொள்ளும் ஒரு மாணவன்கூட இங்கு மிகுந்த அக்கறையோடு கவனிக்கப்பட்டான். 

**அந்தப் பின்தங்கிய மாணவருக்கு படத்தில் ஒரு பகுதி புரியும்வரை இங்கே மற்ற மாணவர்களும் அடுத்தப்பகுதிக்குச் செல்லமுடியாது. 

**மிஸ், நான் பரப்பியனாவிற்கு சென்ற அடுத்த ஆண்டே ஆசிரியரானேன். உலகவரைபடத்தை உற்றுநோக்கவோ, கணிதத்தில் பின்னங்களை அறிமுகப்படுத்தவோ பெரும் பட்டப்படிப்பு தேவையில்லையென்று நாங்கள் உணர்ந்தோம். 

**கூட்டாகக் கற்பது சிறந்த அரசியல், தனியாக கற்பது சுயநலம் என்று புரிந்துகொண்டோம். 

**எங்கள் பள்ளிக்கு நகரத்தில் இருந்து வந்த மாணவர்கள் உங்களைப்பற்றி, "ஆசிரியர்கள் என்போர் தடைக்கற்கள், ஏமற்றபடவேண்டியவர்கள் "என்ற அபிப்ராயம் கொண்டிருந்தனர். 

**ஒரு மாணவன் எழுத்தை நல்ல வடிவத்தில் எழுதத்தெரியாவிட்டாலும், இந்த உலகை வாசிக்கத்தெரிந்துள்ளான், தனது கடமை, உறவுகளைப்பேணுதல் போன்றவற்றை தெரிந்துள்ளான், அது போதாதா. 

**மிஸ் நீங்கள் அரசியலமைப்பு சொன்ன அனைவரும் சமம் என்பதை மறந்து, உங்களின் இலக்கணத்தையே அதிகம் மதிக்கிறீர்கள். 

**நோயாளிகளைவெளியேற்றிவிட்டு ஆரோக்யமானவர்களை மட்டும் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்வது போல் உங்களது பள்ளிகள் இருக்கின்றன. 

**கற்றுக்கொள்வதின் தன்மை உணர்ந்து கேள்விகள் கேட்கவேண்டும். தொடர்ந்து கடினமான கேள்விகளைக்கேட்டால், அது திட்டமிட்டு சிக்கவைக்கும் சூழ்ச்சி மனோபாவம் மிஸ். 

**ஆங்கிலம் கற்கும் ஒருவன் ஆங்கிலத்தில் கழிப்பிடம் எங்கே உள்ளது என்று கேட்கத்தெரியாத, நடைமுறை அறிவு இன்றி இருக்கிறான் என்றால் தவறு எங்கே நிகழ்கிறது. 

**மிஸ், உங்கள் மாணவர்கள் இலக்கு என்பது பெரும் துயரமானதுதான், ஒவ்வொரு நாளும் அவர்கள் மதிப்பெண்ணுக்காக, சான்றிதழுக்காக மட்டும்தான் வேக வேகமாக படிக்கிறார்கள். ஆனால், அந்த வேகத்தில் அவர்கள் கற்கும் விஷயங்களின் சிறந்த, நுட்பமானவற்றை தவறவிட்டு விடுகிறார்கள். 

**மிஸ், விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுவதில்லை. உங்களின் கட்டாயப்பள்ளிகள் ஆண்டுதோறும் நாலு லட்சம் குழந்தைகளை பெயிலாக்கி வெளியே தள்ளுகின்றன, அவர்கள் பள்ளியை இழக்கவில்லை மாறாக வகுப்பறைத்தோழர்களை இழக்கின்றனர். அவர்களின் வியர்வை வயல்வெளிகளில் ஓடி நமக்கு உணவாகிறது. 

**மிஸ், ஒரு ஆசிரியரால் பெயிலாக்கப்பட்ட 28மாணவர்கள் பரப்பியனாவிற்கு வந்தனர் அவர்களில் 26பேர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றனர், இப்போது அந்த ஆசிரியர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? 

**மிஸ் எங்களது பள்ளியில்  அனைவரும் தினசரிகளை படித்து நாட்டின் நிலைமைகளை தெரிந்துள்ளனர், நாட்டைப்பற்றி தெரியாத வெறும் பட்டங்களினால் யாருக்கும் பலனில்லை. 

**மிஸ், மாற்றம் தவிர்க்க முடியாதது. பழையவற்றையே நியாயப்படுத்தினால் எந்த முன்னேற்றமும் கல்வியில் ஏற்படப்போவதில்லை. 

**மிஸ், மக்களுக்கான புதிய கல்வித்திட்டம் இத்தாலிய பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போது நாங்கள் எந்தக்கருத்தும் சொல்லமுடியவில்லை, ஏனெனில் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையே. 

**மிஸ், அதிகாரத்தில் ஏழைகள் பங்கேற்றால்தான் கல்வியும் அவர்களுடையதாகும். 

**எந்த சக்தியாலும் தடுக்கமுடியாத மாற்றங்களை சூழல்கள் உருவாக்கும், அதற்கு எதிராக நின்று உங்கள் ஆன்மாவை, அன்பை கறைபடுத்திக் கொள்ளாதீர்கள் மிஸ் !

 இந்தக்கடிதம் கற்பனையல்ல, நிஜம். உலகிலுள்ள அனைத்து ஏழைமாணவர்களின் எண்ணக்குமுறல் இது. 
அருமையான புத்தகம், வாய்ப்பிருந்தால் வாசிக்க வேண்டுகிறேன் நண்பர்களே. 

அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி

Thursday 14 May 2020

மதிப்புரை

ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் – மதிப்புரை ஜே.ஷாஜஹான்


கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, பூமணி போன்ற முன்னத்தி ஏர்கள் உழுதுவளப்படுத்திய கரிசல்பூமிதான் ச. தமிழ்ச்செல்வனின் கதைக்களமுமாகும். மனிதர்கள் நிலத்தோடு கொண்ட பிணைப்பை மையப்படுத்தி நிலம் மனிதர்களை கைவிடுவதும், மனிதர்கள் நிலத்தைவிட்டு விலகுவதுமான நிலவுடைமையின் அந்திமக் காலத்தை கி.ரா பதிவு செய்தார். பூமணியோ அந்த நிலத்தின் உரிமை இழந்த ஆனால் நிலத்தை நம்பியே வாழ விதிக்கப்பட்ட விவசாயக் கூலிகளாக்கப்பட்ட நிலவுடைமை சிதைவுக்குப் பிந்தைய தலித்துக்களின் நெருக்கடிகளை எழுதிவந்தார்.

இவர்களிலிருந்து வேறுபட்டு கரிசல் மண்ணின் உதிரி மனிதர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக, உளவியல் அணுகுமுறையுடன் பேசியவர் கு.அழகிரிசாமி. கதை மாந்தர்களின் அகவியலும், அதனைத தீர்மானிக்கும் புற அரசியலும் மிக முக்கிய மையச் சரடாக அழகிரிசாமியின் படைப்புலகை இயக்கி வந்துள்ளது.

செவ்வியல் இசைபோல் கரிசலை கி.ரா பாடினார் என்றால் பூமணியின் தெம்மாங்கு நாட்டுப்புற இசையாகும். இருவரோடும் வேறுபட்ட இருவரின் சாயல் கலந்த மெல்லிசையே அழகிரிசாமியின் படைப்புகளாகும். ஒரு அடையாளத்திற்காக தமிழ்ச்செல்வனின் முன்னத்தி ஏர் அழகிரிசாமியே எனலாம்.

சொலவடைகள், பழமொழிகள் எனப் பண்பாட்டு சேகரங்களைத் தன் படைப்புகளில் சிலாகித்த கி.ராவும், உதிரி மனிதர்களின் உலகு சார்ந்த நுட்பமாக அறம் சார்ந்து எழுதி வந்த கு.அழகிரிசாமியும் அதிகம் எழுதியிராத பெண்ணின் அகவெளியை நுட்பமாக வரைந்து காட்டியதுதான் தமிழ்ச்செல்வனின் தனித்த அடையாளம் எனலாம்.

ச.தமிழ்ச்செல்வன்
ச.தமிழ்ச்செல்வன்

அதுவரை நிலவி வந்த உள்ளடக்கத்திலும், உருவத்திலும் புதிய முன்மாதிரிகளைத் தந்ததில் புதுமைப்பித்தனின் விரல்களுக்கு பெரும்பங்கு உண்டு. அதற்கு பிறகு பலரும் செய்த வடிவ சோதனைகள் கருத்து வட்டங்களுக்குள் அடங்குவதும், கருத்து மீறல்கள் உருவத் தெளிவின்றி மங்கலாக பதிவாகியிருப்பதும் என விளைவுகள் நிகழ்ந்துள்ளன. புதுமைப்பித்தனை ஒருவரும் மீறவில்லை என்பதல்ல இதன் பொருள். ஒருசேர வகை மாதிரிகளை கட்டமைத்து தந்ததில் பித்தனே தமிழுக்கு முன்மாதிரியாகிறார். உருவம், உள்ளடக்கம் என ஒருசேர அதிர்வுகளை அவர் ஏற்படுத்தியதற்கு எந்தவொரு குறிப்பிட்ட சட்டகத்திற்குள்ளும் தன்னை அடக்கிக் கொள்ளாததும் ஒரு காரணமாகும்.

கருத்து சார்ந்த வரையறைகளோடு உயிர்ப்புடன் கதைகளை எழுத முடியும் என்பதற்கு அழகிரிசாமியே சிறந்த உதாரணம். தன் கதைகளின் மூலம் தனது அரசியல் கொள்கைகளை நிலைநாட்ட முனையும் உத்வேகத்தோடு, கதைகளின் கலாப்பூர்வமான தன்மையும் அழகியலும் சிதைந்து விடாமல் படைக்க முயன்றதிலும் அதில் வெற்றி பெற்றதிலும் தமிழ்ச்செல்வனுக்கு படைப்பு முறை சார்ந்தும் களம் சார்ந்தும் அழகிரிசாமியே முன்னோடி என வரையறுக்கலாம். பிரச்சாரதொணியில்லாமல் கதைகளை தந்த வகையில் இவர் கந்தர்வனின் தொடர்ச்சி எனலாம்.

ஒரு சௌகரியத்திற்காக இத்தகைய வரையறைகள் பயன்படலாமேயன்றி, ஒவ்வொரு படைப்பாளியின் தனித்தன்மையே அவரவர் இருப்பை நியாயப்படுத்தும். தமிழ்ச்செல்வனின் படைப்புகளில் கரிசல் கிராமங்களில் இருக்கும் நடுத்தர வர்க்க மனிதமனங்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகள் – பண்பாட்டு பொருளாதார நெருக்கடிகள் என்கிற தளங்களில் பதிவாகின்றது. அதுவரை இடதுசாரி படைப்பாளர்கள் முன்வைத்து வந்த வர்க்க முரண்பாடு என்கிற பெருவட்டம் தாண்டி சமூக முரண்பாடு எனும் உள்வட்டத்தை கலாப்பூர்வமாக, பிரச்சார தனமின்றி எழுதியுள்ளார் தமிழ்ச்செல்வன்.

அம்முரண்பாடுகள் ஆண்பெண் முரண்பாடு, குழந்தைகள் பெரியோர் முரண்பாடு, பழம் பெருமை யதார்த்த முரண்பாடு, எளிய கிராம மாணவன் ஆங்கிலக் கல்வி முரண்பாடு, இலட்சியவாதம் இயல்புவாத முரண்பாடு எனப் பலவகைகளிலும் விவாதிக்கப்பட்டுள்ளன.

பெண்களின் அகவெளி குறித்த உரையாடல்கள் பாலியல் சார்ந்தே பெரும்பாலும் முன்வைக்கப்படுகிற சூழலில் எளிய வரிகளினாலும் விவரனைகளாலும் கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளதும் தற்செயலானதில்லை. ‘வெயிலோடு போய்’ கதையில் பெண்ணின் பார்வையில் விளக்கப்பட்ட சூழல், ‘பொன் ராசின் காதலில்’ ஆணின் கோணத்தில்விரிகிறது.. ‘குதிரைவண்டியில் வந்தவன்’கதையில் பெண்ணை புரிந்து கொள்ள முடியாத ஆண் பேசப்பட்டால், ‘வெளிறிய முத்தம்’ கதையில் கணவனைப் புரிந்துகொள்ள முடியாத பெண் மையக்கரு ஆகிறாள்.

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் | Buy Tamil ...

இவ்வாறு ஒரு சூழலை பல கோணங்களில் அல்லது இருவேறு கோணங்களில் எழுதிப் பார்த்ததிலும் அழகிரிசாமியின் முன்னுதாரணங்கள் தமிழ்ச்செல்வனுக்கும் கைவந்திருக்கின்றன.
வறட்சி ஏற்படுத்திய வேலை இல்லாத் திண்டாட்டத்தை கரிசல் பூமியில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிரப்பின. குப்பைக் கூளங்களைப் போல் தீப்பெட்டி ஆபிஸ்களுக்கு அள்ளிச் செல்லப்பட்ட குழந்தைகளின் தொலைந்த குழந்தைமை பற்றி எழுதாத எழுத்தாளர்கள் அப்பகுதியில் இல்லை எனலாம். இப்படி எல்லோரும் எழுதிவிட்ட எழுதிக்கொண்டிருந்த ஒரு துயரத்தை எழுதும் தமிழ்ச்செல்வன் கலை நேர்த்தியுடன் படைத்திருக்கிறார். அவரது பாவனைகள் கதையின் ஆரம்ப வரிகள் இவ்வாறு துவங்குகின்றன.

‘குதிங்காலிட்டு உட்கார்ந்தான். சப்பணமிட்டு அமர்ந்து பார்த்தான். ஒரு காலை சப்பணமிட்டு ஒருகாலை நீட்டி இப்படியும் அப்படியுமாய் உட்கார்ந்து பார்த்தான். ம்கூம். எப்படி உட்கார்ந்தாலும் பசித்தது.’

அடுத்தடுத்த வரிகளில் தெருவில் வருகிற மிக்ஸர் வண்டியில் சுற்றி வேடிக்கை பார்க்கும் கிராமத்து ஏழைக் குழந்தைகள், கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் லட்டை எடுப்பதுபோல் பாவனை காட்டி, வாயில் போட்டு தின்பதைப்போல் பாவனை காட்டி சிரித்து மகிழ்ந்து மன நிறைவு கொள்கின்றனர். வாசிக்கிற வாசகனால் சிரிக்க முடியாதபடி அந்த சூழலில் சித்தரிப்பு சிறப்பானது. பசிக்கிற தம்பிக்கு சிறிது அரிசியைத் தந்து அனுப்பும் அண்ணன், அப்பா வேலை பார்க்கும் மில்லில் கிடைக்க இருக்கிற கடலைப் புண்ணாக்குக்கோ எள்ளுப் புண்ணாக்குக்கோ ஏங்குவதும் அதுவே அக்குழந்தைகளின் லட்டாகவும், ஜிலேபியாகவும் பாவனை காட்டுவதுமாக கதை விரிகிறது.

கொஞ்சம் கவனம் பிசகியிருந்தாலும் வெற்றுப் பிரச்சாரமாகியிருக்கக் கூடிய ஒரு சூழல் நல்ல கலைப்படைப்பாக விரிந்திருக்கிறது. தமிழில் மிக அபூர்வமான சிறுகதைகளில் பாவனைகளும் ஒன்று . உலகத்தரத்திலான கதைகளில் ஒன்று எனலாம். சுப்புத்தாய், குரல்கள் ஆகிய கதைகளும் குழந்தையின் உலகத்தை நுட்பமாக பதிவுசெய்த படைப்புகளாகும். லங்கர்பாய் மற்றும் மைனாக்கள் ஆகிய கதைகளிலும் குழந்தைகளின் மன உலகம் முற்றிலும் வேறு களத்தில் பேசப்பட்டுள்ளன,

சிறுவயதில் பழகிய அத்தை மகனின் நினைப்பை சுமந்தலையும் மாரி, அவனைப் பார்க்க பிறந்த ஊருக்கு வந்து, அவன் மனைவி மாசமாயிருக்கிறாள் எனக் கேட்டதும், ‘அது ஒன்னுக்குத்தான் இப்பம் கேடு’ என்கிறாள். இவள் வெளியேறும் போது, ‘மாரியம்மாள் போயிட்டாளா’ என விசாரித்துக் கொண்டுவரும் மச்சானை நினைத்து மாரி ஏங்குகிறாள். பரஸ்பரம் வெளிக்காட்ட முடியாத அன்னை திருமணம் எனும் பந்தம் கைகூடாதபோதும் மீறி வரும் உள்ளார்ந்த காதலை பெண்ணின் கோணத்தில் ‘வெயிலோடு போய்’ கதையில் பேசியிருக்கிறார். இதே சூழலை ஆணின் மனத்தவிப்போடு பேசும் கதை ‘பொன்ராசின் காதல்’. இது ஒரு நுட்பமான விளையாட்டு. ஒவ்வொரு சூழலையும் அதனதன் நியாயங்களோடு பதிவு செய்யும்போது படைப்பாளன் விருப்பு வெறுப்பற்ற பார்வையாளனாகிறான்.

சுப்புத்தாய், குரல்கள், லங்கர்பாய், வார்த்தை மற்றும் மைனாக்கள் ஆகிய கதைகள் குழந்தைகளின் மனஉலகை நமகு விரித்துக் காட்டும் படைப்புகள். அடிப்படையில் பொருளாதார பின்புலமில்லாத குடும்பத்துக் குழந்தைகளின் ஏக்கங்கள் நெருக்கடிகள் பற்றி பேசுகிற கதைகள் தமிழ்ச்செல்வனின் படைப்புக்களில் மற்றொரு முக்கியமான களமாகும். நமது கல்வி அமைப்பு குறித்த வெளிப்படையான விமர்சனமான ‘பதிமூன்றில் ஒன்று’ கதையும் குழந்தைகளின் கதைதான்.

இத்தகைய விமர்சனப்பூர்வமான படைப்புகளை கலாப்பூர்வமாக வடித்தெடுக்க தமிழ்ச்செல்வனின் பகடியும் எளிய கூறல் முறையும் கைகொடுக்கிறது. குழந்தைகளின் மீதான வன்முறைகள் குடும்பம், கல்வி, பாலியல், உழைப்பு என பல முனைகளிலும் நிகழ்த்தப்படுவதை கதைகள் பேசுகின்றன.

 ...
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

வாளின் தனிமை,, மங்கல் பாண்டேயின் நிழல், அரக்கு முத்திரை ஆகிய கதைகள் மாந்திரீக யதார்த்தவாத தன்மை கொண்டவை. நமது வரலாற்றுப் பெருமைகள், பழம் பெருமை பேசும் கதைகள் மாந்திரீக யதார்த்த முறையில் கூறப்பட்டிருக்கிறது. அவரது வழக்கமான தன்மையிலிருந்து மாறும் கதைப் பொருள்கள் வழக்கமான நடையினின்றும் விலகிச் செல்வது பொருத்தமாக உள்ளது.

குழந்தைப் பருவ நினைவுகளுடன் சில கதைகளும் இளமைக்கால மனநிலையிலும், குடும்ப அமைப்பின் நெருக்கடி குறித்த சில கதைகளும், பணிக்களமான ராணுவம், தபால்துறை பின்னணியோடும் கதைகளும் எழுதிய தமிழ்ச்செல்வன் இயக்க அனுபவங்களை கதைகளாக்காத போதும் கட்டுரைகளாக வடித்திருக்கிறார். இதைக் தற்செயலானதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு கலைஞனை அல்லது நுட்பமான மனிதனை குடும்பமும் சமூகமும் ஆட்டிப் படைக்கும் விதத்தை அவர் ‘கருப்பசாமியின் அய்யாவில்’ எழுதியிருக்கிறார். எப்போதும் வித்தைக்காரனைப் போல் செயல்படும் இசக்கிமுத்து வியாபாரம் செய்யப் போகிற ஊர்களில் முதல் வேலையாக எளவட்டக் கல்லைத் தூக்கிப் போடுவதும், கடை வைத்து வடை சுடும்போது வடைகளை சதுரமாகவும் உருளையாகவும் ஏரோபிளேன் மாதிரியும் தயாரிக்கிற வித்தியாசமான மனிதன்.

தினுசாக காபி ஆற்றுவது, கஷ்டப்படுகிற மனிதர்களுக்கு காசில்லாமல் இட்லி தருவது என வாழும் இசக்கிக்கும், யதார்த்த வாழ்விற்கு அவனை மாற்ற விழையும் அவன் மனைவிக்குமான தவிர்க்க முடியாதமுரண்பாடுதான் கதை. ஒரு வகையில் படைப்பாளனுக்கும் குடும்பத்துக்கும் ஆன முரண்பாடு என்பதாகக் கூட கூறலாம்.

பல்வேறு சேட்டைகளை மாற்றிக் கொள்ளமுடிந்த அவனால் சில சின்னச் சின்ன விஷயங்களை மட்டும் சாகிற வரையில் மாற்றிக்கொள்ள இயலவில்லை. கலைஞனால், படைப்பாளனால் சமூகம் கட்டமைக்கும் வரையறைக்குள் அடங்க முடியாத தன்மை இக்கதையில் காட்டப்பட்டுள்ளது. மிக நுட்பமான இக்கதை மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளது மிகுந்த கவனத்துக்குரியது.

பல கதைகள் வெளிப்படையாக சொல்வதைவிட சொல்லாமல் புரிந்துகொள்ள வைக்கிற இடங்கள் முக்கியமானவை. பிரசங்கம் செய்ய வாய்ப்பிருக்கும் பல இடங்களிலும் வாசகனை மதித்து உள்ளுறையாகச் சொல்வது இக்கதைகளின் ஆயுளை மேலும் நீட்டிக்கின்றன.
படைப்பாளன் எதற்கும் தீர்வு சொல்லியாக வேண்டியதில்லை.

சிக்கல்களை கூர்மைப்படுத்தி சுட்டினால் போதுமானது என்கிற நவீன இலக்கிய கண்ணோட்டத்தின் அடித்தளத்தில் தமிழ்ச்செல்வன் கதைகளை எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட கால தமிழ் மக்களின் வாழ்க்கையை மிகையின்றி இயல்புவாத முறையில் எளிய ஆனால் தாக்கம் ஏற்படுத்தத்தக்க மொழியில் பதிவு செய்துள்ளார்.

விமர்சனக் கண்ணோட்டத்தில் இக்கதைகளை அணுகுவோர் கட்டுடைத்து விமர்ச்சிக்கக்கூடும். நான் எனது வாசக ரசனையின் அடிப்படையில் தமிழ்ச்செல்வனின் படைப்புகளை அணுகியுள்ளேன். எது சரி எது தவறு என விவாதங்களுக்கு அப்பாற்பட்டு அதுவும் இதுவும் தான் வேண்டும் இலக்கியத்திற்கு’ எனத் தோன்றுகிறது. எளிய மொழியில் நல்ல கதைகளை அழகியல் பூர்வமாக தந்துள்ள தமிழ்ச்செல்வன் தொடர்ந்து எழுத வேண்டுமென விழைகின்றேன்.

ச.தமிழ்ச்செல்வன் சிறுகதைகள்..

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

அன்புடன். 
ஜே.ஷாஜஹான், திருமங்கலம்

Wednesday 18 April 2018

சையத் உசேன் பாஷா: மரணத்தில் மிதக்கும் சொற்கள்: ஜே.ஷாஜஹான்... (உயிர் எழுத்து ஏப்ரல் இதழ் 2018)



எழுத்தாளர் அர்ஷியா எனும் சையத் உசேன் பாஷா அவர்கள் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. சிக்கலற்ற பழக்க வழக்கங்கள், எளிய உணவு முறை கொண்டிருந்த ஒரு இலக்கியவாதியின் திடீர் இழப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.



வாழும்போதே அங்கீகரிக்கப்படுகிற இலக்கியவாதிகள் மிககுறைந்த தமிழ் சமூகத்தில் அர்ஷியா தனது முதல் நாவலானஏழரைப்பங்காளி வகையறாவுக்காக தமிழக அரசின் விருதினைப்பெற்றும், “திப்புசுல்த்தான்எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக .மு...வின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றும் பாராட்டுப்பெற்றவர். அவரது ஏழரைப்பங்காளி வகையறா நாவல் ஒரு இனவரைவியல் படைப்பு என அறியப்பட்டது. தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகாத இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அதிலும் அவர்களின் ஒரு பகுதியினரேகூட அதிகம் அறிந்திராத உருது முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டினை பதிவு செய்த வகையில் அர்ஷியா ஒரு முன்னோடி எனலாம். தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி எழுதும்பொழுது படைப்பாளிக்கு தன்னையறியாமல் தற்பெருமை பீறிடக் கூடும். ஆனால் விருப்புவெறுப்பின்றி தன் சமூக வாழ்வியலை அழகியலுடன் நாவலாக்கியவர் அர்ஷியா. இஸ்லாமியர்களின் வாழ்வியலை எழுதினாரேயன்றி இஸ்லாமியராய் மட்டும் இயங்கிய படைப்பாளியல்ல அவர்.

Friday 13 April 2018

நிறைத்தெப்பம் ( உயிர் எழுத்து பிப்ரவரி 2018)


உன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறேன்என்று ஞானத்தின் குறுஞ்செய்தி வந்ததும் கார்த்திக்கு படபடப்பு வந்தது. ஞானத்தைப் பார்த்துவிட்டால் செல்வி இன்று முழுவதும் முகத்தைத் திருப்பிக் கொள்வாள். கடை  வீதியிலிருந்து உடனடியாக பைக்கை வீட்டிற்கு திருப்பினான். ஞாயிற்றுக்கிழமையாக இல்லாவிட்டால் அவனை அலுவலகத்திற்கு வரச்சொல்லிவிடலாம். 

               ஞானம் என்கிற ஞானசேகரன் நண்பன். வாலிப வயதில் இலக்கியம், கவிதை, புரட்சி என கூட்டங்களுக்குச் செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் ஏதாவது எழுவதுமாய் இருந்த காலத்தில் கிடைத்த நட்பு. வேலை, திருமணம் என ஒவ்வொன்றாய் வர அதே வரிசையில் மேற்குறித்த ஒவ்வொன்றும் விலகிப்போய்விட்டன. நண்பர்கள் எல்லோரும் ஆடி அடங்கியும் ஞானம் மட்டும் இலக்கியப்பித்து தெளியாமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாண்டுகாலம் சினிமாப்பித்துப்பிடித்து ஆடினான். வார இதழ் ஒன்றில் நிறுபராகப் பணியாற்றி போலீஸிடம் அடிவாங்கினான்

 லக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைத் தேடி வந்து மணிக்கணக்காய் பேசிக் கொண்டிருப்பான். எப்போது படிப்பான் எப்போது எழுதுவான் எனத்தெரியாது, போனால் போன இடம், வந்தால் வந்த இடம். எந்த  முன் முடிவும் இல்லாமல் எப்படி ஒருவனால் வாழ முடிகிறது என்பது ஆச்சிரியமே. ஒரு துறவி போன்ற சுதந்திரவாழ்க்கை வாய்க்க அவன் திருமண பந்தத்தில் மாட்டிக் கொள்ளாத கொடுப்பினைதான் காரணம்.

Saturday 19 August 2017

தொலைந்த வண்ணத்துப்பூச்சிகள்...




எத்தனையோ மலர்கள் தவிர்த்து
எருக்கஞ்செடி நுனியில்
பறந்து பறந்து உட்காரும்
அந்த வண்ணத்துப்பூச்சி
நினைவூட்டுகிறது
யார் சொல்லியும் கேளாமல்
சைக்கிள் கடைக்காரரை
கட்டிக் கொண்டு
காணாமல் போன
வனிதா அக்காவை!