Tuesday, 25 July 2017

கருப்பும் வெளுப்பும்..


கருத்தவன் காணும் உலகு ஒன்றாகவும்
வெளுத்தவன் பார்ப்பது மற்றொன்றாயும்
எதிரெதிர் திசைகளில்
ஒரே வாழ்க்கை

கடலோர வீட்டிற்கு உயிர் பயம் தந்தும்
மாடவீதியில் இதம் சுகம் தந்தும்
வெவ்வேறாய் அர்த்தப்படுகிறது
அதே பௌர்ணமி இரவு

குடிசை வீட்டின் தூக்கம் கெடுத்தும்
காரை வீட்டில் தாலாட்டிக்கொடுத்தும்
மாறுபட்டு நிறம் காட்டுகிறது
அந்தி நேரக் கனமழை

உறைபனிக் கொடுமையை
ஒரு போதும் அறியான் வெப்ப நாட்டான்
பெண்ணின் வலிகள்
எப்படி அறிவான் ஆணாய் பிறந்தவன்?

அடங்கிப்போவென நீ போதிப்பதற்கும்
அத்து மீறி அவன் கொதிப்பதற்கும்
ஊருக்குள் உன் வீடும்
சேரியில் அவன் வீடுமாய்
பிரிந்து கிடப்பதே காரணம் என்றுணர்.

No comments:

Post a Comment