Thursday 20 July 2017

கண்டது மொழியும் கவிதை...




                தோழர் ஷாஜஹான் எனது நண்பர்.  அஃதென்ன தோழர் என்று சொன்ன பிறகு நண்பர் என்று சொல்லல் வேண்டும்  என  வியக்கலாம்.  தொழுத கையுள்ளும் பகை ஒடுங்கும்  என்பதும் மெய்தானே! முரண் என்பது வேறு  பகை  என்பது வேறு.  நல்ல பகையாக இருந்தால் அதனை நேர் கொள்ளலாம். இராவணன் கூற்றாகக் கம்பன் சொல்வது;  நாசம் வந்து உற்ற காலை  நல்லதோர்  பகையைப் பெற்றேன்  என்று.  நல்ல பகை  போலக் கர்வம் கொள்வது போலல்ல  அற்பப் பகை கண்டு. இந்த சந்தர்ப்பத்தில் சிறுமை அரசியலுக்குள் நுழைவது  அத்தனை பொருத்தமான  செயலல்ல
                சென்னையில் ஒரு சந்தர்ப்பத்தில், ‘உயிர் எழுத்து நிகழ்ச்சிக்காக நண்பர் ஷாஜஹானுடன் ஒரே விடுதி அறையை இரு நாட்கள் பகிர்ந்து கொண்டேன். வெளிப்படையாகப் பேசுகிறவர் அல்லது என்னிடம்  வெளிப்படையாக இருப்பவர்.  பெரும்பாலும் எமக்குள் ஒத்த கருத்துக்கள் உண்டு.  இலக்கியம், இசை,  அரசியல் என்ற வைப்பு முறையில் உரையாடல்  இருக்கும்.  ஆழமான இசைப்பிரியர். அதையொரு ஆடம்பர அடையாளமாக இல்லாமல், அந்தரங்கமான அனுபவமாகக் காண்கிறவர். எனக்குப் பிரியமான இந்து°தானி இசைக்  கலைஞர்களிடம் அவருக்கும்  ஈடுபாடு உண்டு.  2013-ல் வாழ்நாள் சாதனைக்கானஇயல் விருது வாங்க நான் கனடா சென்ற போது, மூத்த  எழுத்தாளர் .முத்துலிங்கத்துக்காக  அவர் வாசித்திருக்க  வாய்ப்பில்லாத சில  படைப்பாளிகளின்  சிறுகதைத்  தொகுப்புகள் எடுத்துப் போனேன். சந்திரா, இளஞ்சேரல், என்.ஸ்ரீராம், தமயந்தி, லஷ்மி சரவணக்குமார் என  அவற்றுள் ஒன்று ஷாஜஹான் தொகுப்பு.  

              
                ஊக்கமின்மையோ, அலுவல் நெருக்கடியோ, ‘ என்ன எழுதி என்ன ஆகப்போகிறது என்ற மனோபாவமோ   ஷாஜஹான் தொடர்ந்து எழுதவில்லை. அதிகம் எழுதவில்லை. சில  மொழி பெயர்ப்புகள், ஒரு ஆறுதல். வேறு சில ரோடும்   எனக்கந்த மனத்தாங்கல் உண்டு. குறிப்பாக  சாம்பல்  வானத்தில் மறைiம் பைரவர் எழுதிய டி.கே. தமிழன். விரிவான நாவல்  எழுதும்  அளவுக்கு ஷாஹானிடம் அனுபவங்கள் உண்டென்று அறிவேன்.  அவரவர்க்கான ஆயுதத்தையும்  இலக்கையும் அவரவர்தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளல் வேண்டும்?             
   
                இந்தப் பின்புலத்தில் தான்,  தனது கவிதைகளை என்னிடம் வாசிக்கச் சொல்லி  கேட்டார்.  நம்மை சங்கப்பலகை என்று நினைத்தாரோ வேகவதி நதி என்றென்ணினாரோ! என்னிடம் அவர் சொன்னவற்றை  அப்படியே திருப்பி எழுதுகிறேன்.  தோழர் , பழசும்  புதுமாகக் கொஞ்சம் கவிதைகள் அனுப்பி இருக்கேன். வாசிச்சுப் பாருங்க... வெளியிடலாம்னா வெளியிடலாம்,  வேண்hம்னா விட்டிரலாம்...” அஃதோர் பெரிய பொறுப்பு. கர்ப்பத்தைக் காப்பாற்றி வளர்க்கலாமா, கலைத்து விடலாமா என்று கேட்பதைப் போல. வாசித்துப் பார்த்து விட்டு ஷாஜஹானிடம் சொன்னேன், “தோழர், உங்கள்  கவிதைகள் பற்றி உங்களுக்கு  இருக்கும் அபிப்பிராயம்தான் எனக்கும். ஆனால் கவிதைங்கிற பேர்லே  நம்முடன் கடை பரத்தப்படும் பல தொகுப்புகளை விட, உங்களுடையது மோசமானதாக இல்லை. தொகுப்பாகப் போட்டுட்டா  அதுபாட்ல தன்னுடைய இடத்தைக் கண்டடைந்து கொள்ளும்  என்றேன்.  கடை  விரித்தேன் கொள்வாரில்லை  என்பது  இராமலிங்க வள்ளலின்  மனக்குறையும் தானே! வாசகன் தானே சரியான தீர்ப்பெழுதும் உரிமை பெற்றவன்.  முன்னுரை, மதிப்புரை, விமர்சனம்  எழுதுபவரின்  தரமதிப்பீட்டுக் கேந்திரம்  பழுதடைந்தது தான் கிடக்கிறது இன்று
                தமிழ்க் கவிதைப்புலம் என்பது மூவாயிரம்  ஆண்டுத் தொன்மையும்  பாரம்பரியமும்  செழுமையும் மொழித் துல்லியமும் கொண்டது.
                அயிரை பரந்த  அம் தன் பழனம் என்றும்
                மான் அடி அன்ன கவட்டிலை அடும்பு என்றும்
                வாள் போல் வாய் கொழுமடல் தாழை என்றும்
                வெண் தலைக் குருகின் மென்பறை  விளிக்குரல் என்றும்
                முல்லையும்  பூத்தியோ  ஒல்லையூர் நாட்டே என்றும்
                வள் எயிற்றுச்  செந்நாய் வயவுறு பிணவிற்கு
                கள்ளியம் கடத்திடைக் கேழல் பார்க்கும் என்றும்
                பறைவையும் விலங்கும் மீனும் தாவரமுமாய் மரபு காத்தது நம் கவிதை. கவித்துவத்தின் உச்சம் தொட்ட  வரிகள் ஆயிரக்கணக்கில் கொண்ட மொழியிது
                மாய்ந்து போகாத வழித்தடங்கள் நமக்கு நமக்கு வள்ளுவனும்  கம்பனும் பாரதியும். மரபு ஒரு சுமை என்றாலும்  மரபு ஒரு  சுவை என்றாலும்  அதனைப் புறக்கணித்துவிட்டு, முகபடாம் தரித்த  மாதங்கமாய்த்  தமிழ்க்  கவிதை நடக்க  இயலாது. தமிழ் மொழியின் கவிதை  அதி உன்னதங்களைத் தொட்ட சாட்சியங்கள்   நம் கைவசம் உண்டு.  பிற மொழிகளில் கவிதை  எழுதிச் சாதித்து விடுவதைப் போல  தமிழில்  அகில இந்திய அளவில் சாகித்ய அகடாமி விருது பெற்ற கவிஞர்களைச் சந்தித்து  உரையாடியிருக்கிறேன்.  விருது பெறப் போனபோதும், வாரணாசிக் கருத்தரங்கின் போதும்  அவர்கள் கவிதையைச் சொல்லிக் கேட்கவும்  வாய்த்திருக்கிறது. அப்போதெல்லாம் எனக்குத் தோன்றியது.  அவர்களின் பெரும்பான்மையான கவிஞர்களை விடவும்  நல்ல தரமான கவிதைகளை எழுதுபவர்கள்  நூற்றுக்கும்  மேலிருப்பார்கள் தமிழில் என்று
                இந்தப் புரிதல்களின்  அடிப்படையில் தான் ஷாஜஹானின்  சிற்றில் எனும் தலைப்புடன் அச்சாக உள்ள கவிதைகளையும்  வாசித்தேன். சிற்றில் என்றால் சின்ன வீடு  என்று பொருளல்ல.  தமிழின்  96 வகையான பிரபந்தங்களில்  ஒன்றான பிள்ளைத் தமிழில் சிற்றில்  என்பதோர் சிறப்பான பருவம்.  குழந்தைகள் மண்ணால் சிறு வீடு கட்டி விளையாடுதல். சிற்றில் கட்டி விளையாடும் போது சிற்றில் சிதைத்தும்தான் விளையாடுவார்கள். குமரகுருபரரின் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழும், பெயரறியாப் புலவர் எழுதிய ஆண்டாள் பிள்ளைத்தமிழும் சிற்றில் பற்றிப் பாடும் அற்புதமான நூல்கள்
                ஷாஜஹானும் தமது  கவிதைகளைச் சிறுவர்  கட்டி விளையாடும் வீடு  என்று கொள்கிறார் போலும். அல்லது தன்னடக்கம் எனலாம்.   உண்மையில்  பெரும்பாலும்  எல்லோருமே தமிழ் இலக்கியப் பரப்பில் சிற்றில்  இழைத்துத்தான் விளையாடுகிறோம் .   கவிதை மட்டுமே  என்றில்லை. சிலவே காலத்தை சவால் விட்டுக் கோபுரங்களாக  நிலைத்துப் போகின்றன. அதற்காக சிற்றில் கூட்டி  விளையாடமல் இருக்கக் கூடுமா?  
                தமிழில்  எழுதப்பட்ட  பல கதைகள், கவிதைகள் தொகுப்பாகாமலே  உதிரியாகக் கிடந்து மட்கி மண்ணோடு போய் விட்டிருக்கின்றன. பண்டு பனையோலை நறுக்குகளில் எழுதப்பட்டவை   பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்று ஆறும் இல்லை, அடையாளமும்  இல்லை. எடுத்துக் காட்டுகள் சொல்லிக் கட்டுரையை நீட்ட விரும்பவில்லை.  ஆனால்  தொகுப்பாக்கி பாதுகாக்கப்படுவது அவசியம் என்பதென் கருத்து
                எந்த மொழியிலும் ஒருவர் போல் மற்றவர் சிந்திப்பதில்லை. மொழியைப்  பயன்படுத்துவதில்லை.  கவிதையை   ஆள்வதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம் என்றாலும் ஒவ்வொன்றும் அவற்றுக்கேயுரிய அழகுகளுடன் அறிமுகம் ஆகின்றன. அந்தப் பதிவுகள் முக்கியமானவை.
                கவிஞனும் கடவுளும் எதிரெதிர்  அமர்ந்து  சூதாடுகிறார்கள். யாவற்றையும்  இழந்து, கடவுளிடம்  தோற்றுக் கையறு நிலையில்  தலை தாழ்த்தி நிற்கிறான்  கவிஞன் கடவுள் சொல்கிறார்.  
                உன்னுள்ளே இருக்கும்
                அந்தக் கவிதையைப் பணயம் வை
                என்று பெறப்படுவது என்ன?  பணயம் வைக்கக் கவிஞன் துணியாத ஒன்று கவிதை. வெல்ல  நிற்பது  கடவுளேயானாலும்  கவிதை பணயப் பொருள் அன்று.  கடவுளுக்கே தெரியாமல் மறைந்து வைத்துள்ளோம் என்று கவிஞன் நம்புவது. கவிதை என்பது  ஆடி  விலைப் படும் தாதி அல்ல, ஆள்பவன் இறைவனே  ஆனாலும்.  ஆனால் கடவுள் அறிந்தே சொல்கிறார்,  அந்தக் கவிதையைப் பயணம் வை  என்று  தொகுப்பாகாமல் காலத்தின் காற்றடியில் கலந்து காணாமற்  போனால் ,  இந்த வரி தமிழுக்கு நட்டம்  தானே ஷாஜஹான்
                அவரவர் வீடு  என்ற கவிதை,  அது எழுதப்பட்ட நோக்கம் காட்டி நிற்கிறது.
                பனை மரக் காடு விட்டு
                ஆழ்கடல்  தாண்டி வரும்
                அகதிகள் குடும்பத்தின்
                கனவில் வருமோ
                அவரவர்  வீடும் மரமும்?’ 
மனித வாழ்வின் அவலம் மொழி, மதம், இனம் என்று  பிரித்து நம்மைப் பாதிப்பதில்லை. அண்மையில்  மத்திய  தரைக்கடலில், துருக்கி பக்கம் கடற்கரையில்  ஒதுங்கிய குர்திஷ் இனத்து  சிரியா நாட்டு  3 வயது ஆலன் குர்தி அகதிச் சிறுவரின் புகைப்படம் உலகை உலுக்கியது
                உலகத் தொழிலாளர்களின்  துயரங்களுக்கு  மேடையில்  மட்டும் உகுத்தால்  போதுமா  கண்ணீர்த்துளிகளை?  ஈழத்தமிழன்  இலட்சக்கணக்கானோர்  சாவு எக்களிப்பைத் தரும் போலும்! தமிழன்  என்று உணர்வு  பெற்றுப் பார்க்கிறார்  ஷாஜஹான். மிகுந்த பெறுப்புடனும்  கவலையுடனும்  வலியுடனும்  ஆற்றாமையுடனும், ‘புத்தம் சரணம் எனும் கவிதையில்
 
                நிராதரவாய்க்   காடுகளில்
                மாற்றுடையின்றி
                தாகத்தோடும் பசியோடும்
                இறுகிப் பிடித்த சயனைடு குப்பியோடும்
                காத்திருக்கிறான் கௌதம புத்தன்
 
                என்று  அவரால்  பேசுவது  சாத்தியமாகிறது. இங்கோ சிலர்  சிங்கள தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  பொருத்தமில்லாத முகமூடிகள் அணிந்த வேறு சிலரோ கௌதம புத்தன் யாழ்ப்பாணத்து    வெள்ளாளனாக இருக்குமோ அல்லது வன்னியின்  தலித்தாக இருக்குமோ என்ற  ஆராய்ச்சியில்  இருக்கிறார்கள். மனச்சாட்சி உயிர்ப்புடன் இருப்பவர்களுக்கு  மாத்திரம் அண்மையில் வெளியான  மூன்று புத்தகங்களை  நான் பரிந்துரைக்கிறேன்.  தமிழ்க் கவியின்ஊழிக்காலம்,  ஷோபா  சக்தியின் க்ஷடிஒ  கதைப்புத்தகம்,  சயந்தனின்ஆதிரை.  வாசித்தால்  சில கனங்களாவது கண்ணீர் உகுக்காமல்  இருக்க இயலாது
                ஆனால் சுதந்திரப் போராட்டக் காலத்து  ஜாலியன் வாலாபாக் போதும், கீழ வெண்மனி போதும் வாழ்நாள் முழுக்க பரப்புரை செய்து திரிவதற்கு  என்றெண்ணுபவருக்கு முள்ளிவாய்க்கால்  எங்ஙனம்  அர்த்தமாகும்
                கடவுள்  பணயமாகக் கேட்டும் கவிதை  ஒளிந்திருக்கிறது  ஷாஜஹான்  ஆழ் மனத்தில்  என்பதற்குபொம்மிக் குட்டியும் பூனைக்குட்டிகளும் என்ற கவிதையில்
                சங்கம் துவங்கி நவீனம் வரை
                கலைந்து கிடந்த புத்தகங்களை
                ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி
                கால் எக்கி  வாகான  இடமொன்றில்
                பூனை வரைந்தாள் பொம்மி
என்று தொடங்கும் கவிதை முதலில் காட்சியைச் சொல்கிறது.  வலிக்கும்  பூம்பாதங்களின்  வலியைக் கொலுசொலி சொல்கிறது.  இறுதியில்  காட்சிப் படுகிறது கவிமனம்
                புத்தகங்களிலிருந்து கேட்டன
                படைப்பாளிகளின் சிரிப்பொலிகள்
                சுவரிலிருந்து கேட்டன
                பூனைகளின் மியாவ் ஒலிகள்
என்றுநேற்று, இன்று, நாளை என்று மூன்று கவிதைகள்  அவற்றுள், நாளை என்று தலைப்பிடப்பட்ட கவிதை பேசுகிறது
                உன்னிலும் அழகாய்
                ஒரு வரி  எழுதவியலாது
                ஏங்கிப் போகும்
                என் கவிதை
                என்று பார்க்கிற விதத்தில் பார்த்தால்  நாளை என்பது எல்லோருக்குமே அற்புதமான  கவிதைதான்
                கோஷங்கலுக்குள்ளும் முன்முடிவுகளுக்குள்ளும்  சுயலாபத்  தோட்டங்களுக்கும்  சிக்காதிருக்கும்  மனித மனங்கள்  தான்  அடுத்தவர்  துன்பத்திலும் ஆயாசப்பட்டுப் பேசமுடியும்,
                உற்றுப் பாருங்கள்
                உங்கள் சாயலிலும்
                யாரேனும் இருக்கலாம்
                கதறிக் கொண்டோ
                பதறிக் கொண்டோ
என்று
                ஷாஜஹானின்சிற்றில்  என்ற இந்தத் தொகுப்பு  முழுமையான,  நிறைவான தொகுப்பு  என்று சொல்ல  நான் துணிய மாட்டேன்.  எனினும் அவ்வப்போது  அவர் பதிவு செய்த நேர்மையான கவிதை வரிகளின் தொகுப்பு  எனலாம். எதிர்காலத்தில்  அவர் கவிதை  எழுதுவாரா,  இதனினும்  நன்றாய்த் தொகுப்பொன்று தருவாரா என்பதற்கு எவரும்  எந்த உத்திரவாதமும்  தர இயலாது,  கவிஞர் உட்பட.  நாம் வாழ்த்தலாம்!.

No comments:

Post a Comment