Wednesday, 19 July 2017

ஜான்சிராணியின் குதிரை... (தேவராஜ் விட்டலன்)சமீபத்தில் நண்பர் தேவராஜ் விட்டலனின் ஜான்சிராணியின் குதிரை கவிதைப் புத்தகத்துக்கு எழுதிய அணிந்துரை...

அகமும் புறமுமாய் ….

        கவிஞர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அவர்களின் உணர்வுகளின் வடிகால்களே கவிதைகள். வெற்று உணர்ச்சிகள் கொண்ட கவிதைகள் பயனளிப்பதோ நீடித்து வாழ்வதோ இல்லை. சமூக அக்கறையுடனான கவிதைகள் தமது தார்மீக கோபத்தால், பொங்கி வழியும் அன்பினால், வெடித்துக் கிளம்பும் ரௌத்திரத்தால் தம் ஆயுளை நீட்டித்து படைப்பாளியையும் நினைவில் நிறுத்துகின்றன.

        தேவராஜ் விட்டலன் தனது முதல்தொகுப்பில் உணர்ச்சிகரமாகத் தொடங்கி தற்போதைய ‘ஜான்சிராணியின் குதிரையில்’ சமூக அக்கறை கொண்ட கவிதைகளோடு பரிணமித்திருக்கிறார். பணி நிமித்தமாய் தெற்குவடக்காய் நீண்ட பயணங்கள் தந்த அனுபவங்களை உள்வாங்கி கவிதைகளாக்கியுள்ளார்.

                        ‘ பொம்மைகள் மொழிந்தன
                         பொம்மைகள் விற்பவள்
                         பொம்மைகள் மட்டும் விற்பதில்லையென ’
என்கிற எளிய மனிதர்களை அவரது பயணம் அவருக்கு கண்டுணர்த்தியுள்ளது.


        தனது பணி நிமித்தமாக வாழவேண்டிய பனிபடர்ந்த மலைகளை, நதி தீரங்களை கவிதைகளில் அழகுற காட்சிப்படுத்தியுள்ளார்.

                        ‘தனிமை சூழ்ந்த
                        இரவொன்றில் துணையாய்
                        இருக்கிறேனென
                        கண் சிமிட்டுகின்றன
        தொலை தூரத்து நட்சத்திரங்கள் ’ எனும் வரிகளை பனி கொட்டும் இமயமலை எல்லையில் நின்று ஒரு இராணுவ வீரன் எழுதும் போது அழகியல் தாண்டி அவரது தனிமை, ஏக்கம், துயரம் என எல்லாமும் வெளிப்படுகிறது. எழுதுவதின் பின்னனி படைப்புகளுக்கு சேர்க்கும் கூடுதல் வண்ணங்கள் கவனத்துக்குரியன.

        நிரந்தரமாய் புலம் பெயர்ந்த அகதிகளைப் போன்றே பனி நிமித்தமாய் தற்காலிகப் பிரிந்தலைதலும் வலிமிக்கது. கிராமங்கள் தங்களின் நிறம் இழந்து வரும் போதும் தாம் அனுபவித்த எளிய மனிதர்களின் அன்பு ஏக்கம் தரக் கூடியது. குழந்தையின் மனதுடன் அவற்றை காட்சிப்படுத்துகிறார் விட்டலன்.

                        …..சில யோசனைகளுக்குப்பின்
அத்திண்ணையிலேயே
மீண்டும் கோடுகளிட்டு தடுத்தாள்..
புரியாத விழிகளோடு என்ன என்றேன்
“ நீ வயசானப்பிறம்
தாத்தா மாதிரி
வெளியில இருக்கனுமில்ல
அதுக்குத்தான் என்றாள் ”
அப்பா இருமிக்கொண்டிருந்தார்.. என்றும்
குட்டிக் குருவிகளும் பறவைகளும் பறப்பதைக் கூட

“விடுபட்ட சொந்தங்களை
சப்தமிட்டு அழைக்கிறது ” என்றும் பதிவுசெய்கிறார்.

“யார் அமர்ந்தாலும்
அழகாய் உள்ளார்கள்
வேம்படி நிழலில்” என்கிற வரிகளில் பதிவான இளமைக்கால கிராம வாழ்வின் நினைவுகள் ரசனையானவை.
       
        அந்நியர்களை எதிர்த்து வீரச்சமர் புரிந்த மண்ணில் கார்ப்பரேட் கம்பெனிகளின் மூலமாக அந்நியச் சுரண்டல் குறித்த கவிதை ‘ ஜான்சிராணியின் குதிரை’ சமகால நிகழ்வுகளுக்கு கவிஞர்கள் எதிர்வினையாற்ற கடமைப் பட்டவர்கள்.
       
        தமது சொந்தப் பணி, இடப்பெயெர்வு நெருக்கடிகளோடு சமூக நெருக்கடிகளையும் இணைக்கும் கவிஞரின் பதிவுகள் கவனத்துக்குரியன. அகம் புறமென பல நூற்றாண்டுகளாய் மொழிந்து வரும்  தமிழ்க்கவிதைகளின் தொடர்ச்சியே நாமனைவரும். சமூக அக்கறையும், அழகியலுமான அகம் புறம் இணைந்த இக்கவிதைகளை பாராட்டுவதும் விமர்சிப்பதும் கவிஞரை அடுத்தடுத்த படிநிலைகளுக்கு இட்டுச் செல்லும். படித்துவிட்டு விவாதியுங்கள்


          17.07.17                                         மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்
        திருமங்கலம்                                         ஜே. ஷாஜஹான்

               
               

No comments:

Post a Comment