Sunday 30 April 2017

கனவினைப்பின் தொடர்ந்து..(எஸ்.ராமகிருஸ்ணன்)

கனவினைப்பின் தொடர்ந்து என்ற குழந்தைகளுக்கான சரித்திர நூலை வாசித்தேன். த.வெ.பத்மா எழுதிய The Forbidden Temple: Stories from the Past நூலை எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார். எதிர் வெளியீடாக வெளியாகியுள்ளது

அமெரிக்காவில் வசிக்கும் த.வெ.பத்மா கணிதம் மற்றும் வரலாறு சார்ந்து குழந்தைகளுக்கான புத்தகங்களை தொடர்ந்து எழுதிவருகிறார்.  இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவரது MATHEMATWIST: number tales from around the world கணிதம் குறித்த சுவாரஸ்யமான கதைகளின் தொகைநூலாகும்.


கற்காலத்தில் குழந்தைகள் வளர்ப்பு பிராணிகளை வைத்திருந்தார்களா. மொகஞ்சதோராவில் உள்ள வணிகசந்தை எப்படி இருந்தது, இந்தியப்பெண்ணை திருமணம் செய்து கொண்ட கிரேக்கத்து சிற்பியின் மகன் தனது மாறுபட்ட தோற்றத்திற்காக பரிகாசம் செய்யப்பட்டது எதனால்,  அக்பருக்கு போலோ விளையாடுவதில் ஆர்வம் எப்படி உருவானது, என சிந்துசமவெளியில் துவங்கி இந்திய சுதந்திரப்போராட்டம் வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகளின் ஊடே  கேள்விகளை எழுப்பி அதற்கான வரலாற்று உண்மைகளை அடையாளம் காட்டுகிறார் பத்மா

ராகுல்ஜியின் வால்காவிலிருந்து கங்கைவரை எப்படி வரலாற்றைப் புனைவாக மாற்றியதோ அது போன்ற முயற்சியே இந்த நூல். குழந்தைகள் வாசிக்கும்படியாகச் சரளமாக இந்நூலை ஷாஜஹான் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

மொகஞ்சதோராவின் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்த ஒரு சிறுவன் முதன்முறையாக அப் பெருநகரைக் காணச்செல்கிறான், கீழ் நகரம், மேல்நகரம் எனச் சுற்றியலைகிறான், முத்திரைகள் செய்யும் தொழிற்பட்டறையைக் காண்கிறான், குளியல்கூடமும், அகன்ற வீதிகளும் அவனை வியப்பில் ஆழ்த்துகின்றன, அங்குள்ள சந்தையில் தனது தம்பிக்காகக் களிமண் வண்டி ஒன்றையும் அப்பாவிற்கு அழகிய மேலங்கியும் அம்மாவிற்குக் கழுத்துமணியும் வாங்குகிறான், இந்த நிகழ்வுகளின் ஊடாகச் சிந்துசமவெளி நாகரீகத்தின் தனித்துவம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் விளக்கப்படுகிறது,  இப்படி மொகஞ்சதோராவின் வரலாற்றை ஒரு சிறுவனின் பார்வையில் அறிந்து கொள்வது சுவாரஸ்யமாகயிருக்கிறது

நாய்கள் எவ்வாறு மனிதனுடன் சேர்ந்து வாழத்துவங்கின, வேட்டை சமூகத்தின் வாழ்க்கை எப்படியிருந்தது, அகாசிலஸ் எவ்வாறு தனது அடையாளச் சிக்கலை உணருகிறான், காந்தாரக்கலை எப்படி பிறந்தது. நாலந்தா பல்கலைகழகத்திற்குப் படிப்பதற்காக வந்த லீ வீட்டுநினைவில் எப்படி வேதனைப்பட்டான் , சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான வேனில் ஏன் கடவுளுக்கு நெய்த ஆடையைச் செலுத்தவிடாமல் கோவிலில் தடுத்து நிறுத்தபடுகிறாள், என விழிப்புணர்வு ஊட்டும் கேள்விகளுடன் வரலாற்றின் மறுபக்கத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது இதன் சிறப்பம்சம்,

ஒவ்வொரு பக்கத்திலும் சித்திரங்களுடன் முக்கியமான சரித்திரநிகழ்வுகள், தகவல்கள், குறிப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன, அவை புனைவுகளின் பின்னுள்ள வரலாற்று உண்மைகளை வாசகன் உணர்ந்து கொள்ள துணைசெய்கின்றன

பாடப்புத்தகங்களில் வரலாற்றைப் படித்துச் சலிப்புற்ற மாணவர்களுக்கு இந்த நூல் புதிய வாசிப்பு அனுபவத்தை உருவாக்கும். இந்திய வரலாற்றைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும். அவ்வகையில் சிறந்த அறிமுகநூலாகும்.

---------------------------------------
நன்றி: www.sramakrishnan,com

No comments:

Post a Comment