Sunday 30 April 2017

உலக புத்தகத் தினம் : திண்டுக்கல்


                    புதிய படைப்பாளிகள் உருவாக்க வேண்டும்' என, எழுத்தாளர் ஷாஜஹான் பேசினார்.உலக புத்தகத் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில், எஸ்.எம்.பி.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வாசிப்பு முகாம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது. தலைவர் குருவம்மாள் தலைமை வகித்தார். பாலச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட நுாலகர் ராமச்சந்திரன், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் குப்புச்சாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி முத்துமாணிக்கம், கலை இலக்கிய பெருமன்ற விச்சலன் முன்னிலை வகித்தனர். 


         சிறுகதை எழுத்தாளர் ஷாஜஹான் பேசியதாவது: மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை மதிப்பிடக்கூடாது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணங்கள் தற்கொலை நோக்கிச் பயணிப்பதில்லை. பெண்களின் புரிதல் துல்லியமாக உள்ளது. படைப்பாளிகள் சரியான புரிதலுடன், சமூக அவலங்களை பிரதிபலிக்கும் படைப்புக்களை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் படைப்புக்களை வாசித்துணர வேண்டும். என்றார்.

நன்றி : தினமலர்

--------------------------------------------------------------------------------------------------------------------------

"சமூக அவலங்களை படைப்புகள் வெளிப்படுத்த வேண்டும்'


சமூகத்தில் நிலவும் அவலங்களை வெளிப்படுத்துவதாக படைப்புகள் அமைய வேண்டுமென திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் எழுத்தாளர் ஷாஜஹான் கூறினார்.
 உலக புத்தக தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் பெருந்திரள் வாசிப்பு முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் எஸ்எம்பிஎம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இலக்கிய களம் அமைப்பின் தலைவர் மு.குருவம்மாள் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் ஷாஜஹான் கலந்து கொண்டு பேசியதாவது:
 மனிதர்களின் முன்னோடியான குரங்குகளிடம் இன்று வரை எவ்வித பிரிவினையும் ஏற்படவில்லை. பெரியாரும், காமராஜரும் இல்லாமலிருந்திருந்தால், தமிழகத்தில் சிறுபான்மையினர் உயர் நிலையை அடைந்திருக்க முடியாது. கதாசிரியர்கள் தங்களின் அனுபவங்களை உள்ளடக்கி எழுதும் படைப்புகளே சிறப்பிடத்தை பெறுகின்றன. உலகை நோக்கும் விதத்தில், ஆண்களும் பெண்களும் வேறுபட்டிருந்தாலும், பெண்களின் புரிதல் துல்லியமாக உள்ளது.
 புதுமைப்பித்தன், தி.ஜானகிரரமன், ஜெயகாந்தன் ஆகியோரின் படைப்புகளை வாசித்த பின்னரே, புதிய படைப்பாளிகள் எழுதத் தொடங்க வேண்டும். இன்றைய சமூக அவலங்களை பிரதிபலிப்பதாக படைப்புகள் அமைய வேண்டும். பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரிடம் இருந்த கர்வம் படைப்பாளிகளிடம் ஏற்படுவது அவசியம். படைப்பாளிகள் பிறருக்கு அடிபணியக் கூடாது என்றார்.
 அதனைத் தொடர்ந்து இலக்கிய களம் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஜெமீமா என்ற கதைக்கு வால்டர் ராபின்சன் என்பவருக்கு முதல் பரிசும், வலை என்ற கதைக்கு சுப்பையா முருகன் என்பவருக்கு 2ஆம் பரிசும், குலசாமி என்ற கதைக்கு சோ லெட்சம் என்பவருக்கு 3ஆம் பரிசும் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் இலக்கிய கள நிர்வாகிகள் ராமமூர்த்தி, மணிவண்ணன், சரவணன், பாலசந்திரன், லதா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 நன்றி : தினமணி

No comments:

Post a Comment