Wednesday 18 April 2018

சையத் உசேன் பாஷா: மரணத்தில் மிதக்கும் சொற்கள்: ஜே.ஷாஜஹான்... (உயிர் எழுத்து ஏப்ரல் இதழ் 2018)



எழுத்தாளர் அர்ஷியா எனும் சையத் உசேன் பாஷா அவர்கள் திடீர் மாரடைப்பால் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. சிக்கலற்ற பழக்க வழக்கங்கள், எளிய உணவு முறை கொண்டிருந்த ஒரு இலக்கியவாதியின் திடீர் இழப்பு பேரதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.



வாழும்போதே அங்கீகரிக்கப்படுகிற இலக்கியவாதிகள் மிககுறைந்த தமிழ் சமூகத்தில் அர்ஷியா தனது முதல் நாவலானஏழரைப்பங்காளி வகையறாவுக்காக தமிழக அரசின் விருதினைப்பெற்றும், “திப்புசுல்த்தான்எனும் மொழிபெயர்ப்பு நூலுக்காக .மு...வின் மொழிபெயர்ப்பாளர் விருதினைப் பெற்றும் பாராட்டுப்பெற்றவர். அவரது ஏழரைப்பங்காளி வகையறா நாவல் ஒரு இனவரைவியல் படைப்பு என அறியப்பட்டது. தமிழிலக்கியத்தில் அதிகம் பதிவாகாத இஸ்லாமியர்களின் வாழ்க்கையை அதிலும் அவர்களின் ஒரு பகுதியினரேகூட அதிகம் அறிந்திராத உருது முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை, பண்பாட்டினை பதிவு செய்த வகையில் அர்ஷியா ஒரு முன்னோடி எனலாம். தான் சார்ந்த சமூகத்தைப் பற்றி எழுதும்பொழுது படைப்பாளிக்கு தன்னையறியாமல் தற்பெருமை பீறிடக் கூடும். ஆனால் விருப்புவெறுப்பின்றி தன் சமூக வாழ்வியலை அழகியலுடன் நாவலாக்கியவர் அர்ஷியா. இஸ்லாமியர்களின் வாழ்வியலை எழுதினாரேயன்றி இஸ்லாமியராய் மட்டும் இயங்கிய படைப்பாளியல்ல அவர்.


இளம் வயதில் பத்திரிக்கையாளராய் பணியாற்றிய அனுபவம் அவரின் படைப்பு எல்லைகளை விரிவுபடுத்திதந்தது. பொய்க்கரைப்பட்டி, அதிகாரம் ஆகிய நாவல்களில் அவரது புலனாய்வு இதழியல் அனுபவம் வெளிப்படுகிறது. ஆசிரியர்களின் இடமாறுதல் அலைக்கழிவுகள் பற்றி அவரதுகரும்பலகைநாவல் சமகாலச்சிக்கலை படைப்பாக்கியது. பொதுவாகவே சமகால சிக்கல்களை கையாண்டு வெற்றிபெறுவது மிகக்கடினமானது. அர்ஷியாவின் துணிச்சலும் நம்பகமான தரவுகளும் அதை படைப்பாக்கிய அவரது நுட்பமான கலைத்தன்மையும் அந்நாவலை பேசவைத்தன


தராசு வார இதழ், தீக்கதிர் நாளேடு உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பணிபுரியும்போதே மொழிபெயர்ப்பார்வம் கொண்டிருந்தார். நிழலற்ற பெருவெளி, திப்புசுல்த்தான், பாலஸ்தீன், மதுரை நாயக்கர் வரலாறு, பாலைவனப்பூ ஆகிய நூல்கள் அவரது தங்குதடையற்ற மொழிபெயர்ப்புக்கு சான்றுகள் ஆகும். தனது இதழியல் அனுபவங்களைசரித்திரப்பிழைகள்எனும் கட்டுரை தொகுப்பாக எழுதியுள்ள அர்ஷியா இவை அனைத்தையும் கடந்த பத்தாண்டுகளில் தீவிர வேகத்துடன் எழுதியுள்ளார். கள ஆய்வுகள் செய்து படைப்புகளை மெருகேற்றும் ஊர்சுற்றி அவர்.

நண்பர்களுடன் மிகவும் எளிமையாக தோழமையுடன் பழகக்கூடியவர் பல்வேறு தளத்திலும் நிலையிலும் உள்ள இலக்கியவாதிகளை நேர்த்தியாக கையாள்வார். நிதானம் தப்பிய சிலரை கையாளத்தெரியாமல் குதறுபடும்போதெல்லாம் அர்ஷியாவின்மீது எனக்கு பொறாமைவரும். மிக எளிய சத்தமில்லாத சிரிப்பால் அவர்களை கடந்துவிடுவார் தன்னிலும் பாதிவயதுடைய இளைஞர்களிடம் சமமாய் பழகுவார். தம்பிமார்களைவாங்க ராசாஎனும் மதுரைத்தொனியில் அழைத்து ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்.

மனைவி மற்றும் மகள்மீது பேரன்பு கொண்டவர். ,மகளிடம் பிரியம்கொள்ளாத தகப்பன்கள் உண்டா என்ன? மகளின் பெயரையே தனது புனைப்பெயராக்கி எழுதிவந்தார். மகளின் திருமணத்திற்கு படைப்பாளிகள், பதிப்பாளர்கள், உறவினர்கள், நண்பர்களென பலரையும் அழைத்து சிறப்பாக நடத்தினார். அநேகமாய் அதுவே அவர் வாழ்வின் மிகவும் மகிழ்வான தருணமாக இருந்திருக்கக் கூடும்.

மதுரை மக்களின் வாழ்வியல் பற்றியும் குறிப்பாக அங்கே வாழும் உருதுமுஸ்லீம்கள் வாழ்நிலை பற்றிய தமிழில் ஆகச்சிறந்த பதிவுகள் அர்ஷியாவினுடையது. பெரும்பாலான படைப்பாளிகளைப் போன்று அவரும் தனது உடல்நலனை கருத்தில் கொண்டிருக்கவில்லை போலிருக்கிரது.
அவரது சிறுகதைதொகுப்பானமரணத்தில் மிதக்கும் சொற்கள்முழுவதுமே மரணம் பற்றிய கதைகள் கொண்டது. அவரது மற்றொரு சிறுகதை தொகுப்பின் பெயர்கபர்ஸ்தான்  கதவுஎன்பது.

என் வீட்டிற்குவந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் இந்த கதை தொகுப்பின் தன்மைபற்றி கேட்டேன் மரணத்தை நோக்கித்தானே நம் வாழ்க்கை என்ற அவரது கருத்தையும், மரணம் பற்றிய படைப்புகளையும் அன்றைக்கு இலக்கியபூர்வமாய் புரிந்துகொண்டேன். தூங்குவதுபோன்றே கிடத்தப்பட்டிருந்த அர்ஷியாவின் உடலருகே துயருற்று நிற்கையில் அதன் எதார்த்தம் என்னைச்சுட்டது.
போய்வாருங்கள் தோழர் அர்ஷியா உங்கள் படைப்புகள் நீடு வாழும்.
-------------------------------------------
 ஜே. ஷாஜஹான்
-------------------------------------------
                                                         

1 comment:

  1. அருமையான பதிவு சார்...
    அவருடன் ஊர் சுற்றியவன் அவரது இழப்பு எனக்கு பேரிழப்பு

    ReplyDelete